மனிதநேய மக்கள் கட்சி செயற்குழு ! உள்ளாட்சி மன்றத் தேர்தலிலும் அ.இ.அதிமுக உடன்கூட்டணி !

மனிதநேய மக்கள் கட்சி மாநிலச் செயற்குழு 17.9.2011 அன்று கட்சியின் தலைவர் பேராசிரியர் எம்.எச். ஜவாஹிருல்லா தலைமையில் மதுரையில் நடைபெற்றது. இதில் 18 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தீர்மானம் : 1 ,நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் மனிதநேய மக்கள் கட்சி அங்கம் வகித்த அ.இ.அதிமுக கூட்டணி வேட்பாளர்களை வெற்றிபெறச் செய்து, அ.இ.அதிமுகவை ஆட்சியில் அமர்த்திய தமிழக மக்களுக்கு செயற்குழு நன்றி தெரிவித்து கொள்கிறது. மனிதநேய மக்கள் கட்சி வேட்பாளர்கள் போட்டியிட்ட 3 தொகுதிகளில் ஆதரவு அளித்து பிரச்சாரம் செய்து வெற்றிக்குப் பாடுபட்ட அதிமுக, தேமுதிக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட, புதிய தமிழகம், சமத்துவ மக்கள் கட்சி, பார்வார்ட் ப்ளாக், இந்தியக் குடியரசு கட்சி, மூவேந்தர் முன்னணிக் கழகம், கொங்கு இளைஞர் பேரவை உள்ளிட்ட அரசியல் கட்சிகள் மற்றும் இந்திய தவ்ஹீத் ஜமாத், இஸ்லாமிய விழிப்புணர்வு கழகம், ஜமாத்துல் உலமா சபை உள்ளிட்ட சமுதாய அமைப்புகளுக்கும் இச்செயற்குழு மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறது. கூட்டணிக்கு அப்பாற்பட்டு இருப்பினும் ம.ம.க வேட்பாளர்களை ஆதரித்த ம.தி.மு.க.விற்கும், நாம் தமிழர் கட்சிக்கும் இந்த செயற்குழு நன்றி தெரிவித்துக் கொள்கிறது.

தீர்மானம் : 2 , தேர்தல் வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்றி வரும் அரசுக்குப் பாராட்டு தெரிவிக்கும் இச்செயற்குழு, தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றான முஸ்லிம்களின் இட ஒதுக்கீடு அளவை அதிகரிப்பது, மற்றும் தற்போது முஸ்லிம்களுக்கான தனி இட ஒதுக்கீட்டில் உள்ள குறைபாடுகளைக் களைவது, தனி இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்துவதைக் கண்காணிக்க குழு அமைப்பது ஆகியவற்றையும் உடனடியாக நிறைவேற்ற ஆவன செய்ய வேண்டும் என தமிழக முதல்வரை இச்செயற்குழு கேட்டுக் கொள்கிறது.

தீர்மானம் : 3 , பத்தாண்டுகளுக்கும் மேலாக தமிழக சிறைகளில் வாடிவரும் சிறைவாசிகளை பாரபட்சம் காட்டாமல் விடுவிக்க வேண்டும் என தமிழக அரசை இச்செயற்குழு கேட்டுக் கொள்கிறது. கடந்த திமுக ஆட்சியில் முஸ்லிம் சிறைவாசிகளுக்கு மட்டும் பாரபட்சம் காட்டப்பட்டு வஞ்சிக்கப்பட்ட நடைமுறையை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என தமிழக அரசை இச்செயற்குழு வலியுறுத்துகிறது.

தீர்மானம் : 4, பெட்ரோல் விலையை மீண்டும் உயர்த்தி பொது மக்களின் மீது தாங்க முடியாத சுமையை ஏற்றியுள்ள மத்திய அரசை இச்செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது.. சமையல் எரிவாயு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலையை உயர்த்தும் முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும் எனவும் இச்செயற்குழு வலியுறுத்துகிறது.

தீர்மானம் : 5,முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கு தடா சட்டத்தின் படி விசாரிக்கப்பட்டது. இதில் குற்றம் முறையாக நிரூபிக்கப்படாமல் மரண தண்டனை வழங்கப்பட்டுள்ள பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோருக்கும், நாடாளுமன்றத் தாக்குதல் வழக்கில் எந்தக் குற்றச்சாட்டும் நிரூபிக்கப்படாமல் மரண தண்டனை வழங்கப்பட்ட அப்சல் குருவுக்கும் தண்டனை ரத்து செய்யப்பட வேண்டும் என இச்செயற்குழு கேட்டுக் கொள்கிறது.

தீர்மானம் : 6, புதுச்சேரி மாநிலத்தில் முஸ்லிம்களுக்கு வழங்கப்பட்டுள்ள தனி இடஒதுக்கீடு அளவு போதுமானதாக இல்லை. எனவே புதுவை மாநிலம் முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு அளவை அதிகரித்து தர வேண்டும் என இச்செயற்குழு கேட்டுக் கொள்கிறது.

தீர்மானம் : 7, புதுவை மாநில வக்ஃப் வாரிய நிர்வாகம் கடந்த ஆட்சியிலும் அமைக்கப்படவில்லை. புதிய ஆட்சி ஏற்பட்டுள்ள சூழ்நிலையிலும் அதே நிலை நீடிக்கிறது. எனவே புதுவை மாநிலத்தில் உடனடியாக வக்ஃப் வாரியத்தை அமைத்து, வக்ப் வாரிய தலைவரையும், உறுப்பினர்களையும் நியமிக்க வேண்டும்.

தீர்மானம் : 8, ஊழலுக்கு எதிராக அத்வானி அறிவித்துள்ள ரத யாத்திரையும், நரேந்திர மோடி அறிவித்துள்ள உண்ணாவிரதத்தையும் நகைப்புக்குரியது எனக் கண்டிக்கும் இச்செயற்குழு, இவர்கள் போராட்டங்கள் என்ற போர்வையில் நடத்தும் வன்முறைகள் பொதுஅமைதிக்கு பங்கம் விளைவிக்கக்கூடியவை என மத்திய அரசை இந்த செயற்குழு எச்சரிக்கிறது. கார்கில் போரில் மரணித்த ராணுவ வீரர்களுக்கு சவப் பெட்டி வாங்கியதிலும், ராணுவத்திற்கு ஆயுதம் வாங்கியதிலும் ஊழல் செய்யத் துணிந்த பா.ஜ.க.வினர் ஊழலை எதிர்த்து போராடுவது வேதனைக்குரிய வேடிக்கை. பிரதமர் பதவி கனவில் இருக்கும் இரு பா.ஜ.க வன்முறையாளர்களின் அரசியல் போட்டியில் பொது அமைதிக்கு பங்கம் ஏற்பட்டு விடாமல் முன்னெச்செரிக்கை நடவடிக்கைகளை மத்திய அரசு எடுக்க வேண்டும் என இச்செயற்குழு கேட்டுக் கொள்கிறது.

தீர்மானம் : 9 முஸ்லிம் சமுதாயத்தினர் பெரும்பான்மையாக வசிக்கும் பகுதிகள் திட்டமிட்டு பெண்கள் தொகுதிகளாகவும், தனித் தொகுதிகளாகவும், உள்ளாட்சித் தேர்தல் நேரத்தில் மாற்றப்பட்டிருப்பதற்கு இச்செயற்குழு வேதனையையும், கண்டனத்தையும் தெரிவிக்கிறது. அதிகார வர்க்கத்தில் ஊடுருவி உள்ள ஆதிக்க சக்திகளின் சதிச்செயலை, தமிழக அரசு உணர்ந்து, முஸ்லிம் சமுதாயத்தின் உள்ளாட்சி பிரதிநிதித்துவத்தைப் பாதுகாக்கும் வகையில் உரிய திருத்தங்களை செய்ய வேண்டும் என இச்செயற்குழு வலியுறுத்துகிறது.

தீர்மானம் : 10, எதிர்வரும் செப்டம்பர் 21 அன்று ஐ.நா. பொது அவையில் பாலஸ்தீனத்தை சுதந்திர நாடாக அறிவிக்கக் கோரி வாக்கெடுப்பு நடைபெற உள்ளது. தேசத் தந்தை காந்தியடிகள் கொள்கைப்படி இந்தியா, பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக வாக்களிப்பதோடு, பிற நாடுகளின் ஆதரவைத் திரட்டும் பணியையும் மேற்கொள்ள வேண்டும் என்றும் இச்செயற்குழு கேட்டுக் கொள்கிறது.

தீர்மானம் : 11, மனிதநேய மக்கள் கட்சி அ.இ.அதிமுக கூட்டணியில் அங்கம் வகித்து சட்டமன்றத் தேர்தலை சந்தித்ததைப் போன்று, நடைபெற உள்ள உள்ளாட்சி மன்றத் தேர்தலிலும் மனிதநேய மக்கள் கட்சி அ.இ.அதிமுக உடன் இணைந்து தேர்தலை சந்திப்பது என முடிவு செய்கின்றது.

தீர்மானம் : 12, சட்டமன்றத் தேர்தலைப் போன்று மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி தேர்தலில் மனிதநேய மக்கள் கட்சியின் வேட்பாளர்கள் தனிச் சின்னத்தில் நிற்பது என இந்த செயற்குழு முடிவு செய்கிறது.

தீர்மானம் : 13, முல்லைப் பெரியாறு அணை வழக்கு உச்சநீதிமன்றத்தில் இருக்கும் போது கேரளா மாநில அரசு அவர்களுக்கு சாதகமான வகையில் அணையை இடித்து புதிய அணையை கட்ட முயன்று வருகிறது. இம்முயற்சியை மத்திய அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என்பதோடு, இந்தப் பிரச்னையில் இரண்டு மாநில மக்களும் ஏற்றுக் கொள்கின்ற வகையில் சுமூகமான தீர்வுகாண, அதற்கான முயற்சிகளை மத்திய அரசு செய்ய வேண்டும் என செயற்குழு கேட்டுக் கொள்கிறது.

தீர்மானம் : 14,ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி உள்பட தென் மாவட்ட கலவரத்தில் துப்பாக்கிச் சூட்டில் இறந்தவர்களின் குடும்பத்தாருக்கு செயற்குழு ஆறுதல் தெரிவித்துக் கொள்வதோடு இறந்தவர்களின் குடும்பத்திற்கு தலா 5 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும் எனவும், இக்கலவரம் சம்பந்தமாக பொதுமக்கள் மீது போடப்பட்டுள்ள வழக்குகளை திரும்பப் பெறவேண்டும் எனவும் தமிழக அரசை இந்த செயற்குழு வலியுறுத்துகிறது.

தீர்மானம் : 15, மக்களுக்கு ஆபத்து விளைவிக்கக் கூடிய கூடங்குளம் அணுமின் நிலையத்தை மூட மத்திய மாநில அரசுகள் தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என செயற்குழு கேட்டுக் கொள்கிறது.

தீர்மானம் : 16, இலங்கைக் கடற்படை தமிழக மீனவர்களைத் தொடர்ந்து தாக்கி வருவதை வன்மையாக கண்டிப்பதோடு, கச்சத் தீவை மீட்டு தமிழகத்திற்கு வழங்க வேண்டும் என மத்திய அரசை செயற்குழு கேட்டுக் கொள்கிறது.

தீர்மானம் : 17, மத்திய அரசு பணிகளில் நாடு முழுவதும் முஸ்லிம்களுக்கு 15 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கிட வலியுறுத்தும் நீதிபதி மிஸ்ரா ஆணைய பரிந்துரையை தாமதம் இல்லாமல் நிறைவேற்ற வேண்டும் என மத்திய அரசை செயற்குழு கேட்டுக் கொள்கிறது.

தீர்மானம் : 18, தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நடைபெற்ற ஊர்வலங்களில் திட்டமிட்டு திண்டுக்கல் மாவட்டம் உள்பட சில மாவட்டங்களில் முஸ்லிம் மக்களுக்கு எதிராக வன்முறை தாக்குதல் நடத்திய தீய சக்திகளை செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது. திண்டுக்கல், புதுக்கோட்டை மற்றும் வேலூர் மாவட்டம் உள்பட பல்வேறு பகுதிகளில் விநாயகர் ஊர்வலத்தை முன்னிட்டு முஸ்லிம்கள் மீது போடப்பட்டுள்ள பொய் வழக்குகளை திரும்பப் பெற வேண்டும் என தமிழக அரசை இந்த செயற்குழு கேட்டுக் கொள்கிறது.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இதுதான் ஊடகம் நடந்து கொள்ளும் முறையா ? பத்திரிக்கையாளர்கள் கவனத்திற்கு ! ! !

முஸ்லிம்கள் மீது படு கொலை தாக்குதல் நரேந்திர மோடி குற்ற வாளியே ! உச்சநீதிமன்ற வழக்கறிஞரின் ஆதார அறிக்கை!

தேவர் ஜெயந்திக்கு கவனம் ? இமானுவேல் நினைவு நாளுக்கு மெத்தனம் ! ! !