800 வீட்டு முன் அர்சி மூடை பின்னணி என்ன ?

கடலூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட விலங்கல்பட்டு பஞ்சாயத்தில், விலங்கல்பட்டு, விலங்கல்பட்டு காலனி, பெத்தாங்குப்பம், குழந்தைக்குப்பம் ஆகிய கிராமங்கள் உள்ளன. இந்த கிராம்ங்களில் 650 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
1,650 வாக்காளர்கள் உள்ளனர். இந்த பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு காங்கிரஸ் மாவட்ட செயலாளர் சரவணன், ராமதாஸ், சுந்தரவதினி ஆகிய 3 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள்.
நேற்று முன்தினம் அதிகாலையில் 600 அரிசி மூட்டைகளை (ஒரு மூட்டை 25 கிலோ எடை கொண்டது) ஒரு வீட்டுக்கு ஒரு மூட்டை வீதம் யாரோ அனைத்து வீட்டு வாசல்களிலும் கொண்டு வந்து வைத்து விட்டு சென்று இருந்தனர். காலையில் எழுந்து வந்து வீட்டு வாசலை பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இந்த பரபரப்பு அடங்குவதற்குள் நேற்று அதிகாலையில் மீண்டும் 2-வது நாளாக விலங்கல்பட்டு காலனியில் 25 கிலோ எடையுள்ள அரிசி மூட்டைகளை 200 வீட்டு வாசல்களில் யாரோ வைத்து விட்டு சென்று விட்டனர்.
இப்பகுதி பொதுமக்கள் காலையில் எழுந்து வீட்டு வாசலில் பார்த்தபோது வீட்டு வாசலில் அரிசி மூட்டைகள் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இதைத்தொடர்ந்து, சில வீடுகளில் உள்ளவர்கள் தங்களின் வீட்டு வாசலில் இருந்த அரிசி மூட்டைகளை எடுத்துச்சென்று கோவில்களிலும், பொது இடங்களிலும் போட்டு விட்டனர்.
சிலர் வீட்டு வாசலில் இருந்த அரிசி மூட்டைகளை தொட்டுக்கூட பார்க்கவில்லை. கோவில்களிலும், பொது இடங்களிலும் போடப்பட்ட அரிசி மூட்டைகளை, வீட்டு வாசலில் போட்ட மர்ம நபர்களே மீண்டும் எடுத்து சென்று விட்டனர்.
வேட்பாளர் யாரோ வாக்காளர்களின் ஓட்டுகளை பெற இதுபோல் செய்துள்ளனர். இந்த சம்பவம் இந்த பகுதியில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதேபோல் செய்யாறு நகராட்சி 4-வது வார்டு பகுதியில் வாக்காளர்களுக்கு ஓட்டுப் போட வலியுறுத்தி தலா 25 கிலோ கொண்ட அரிசி மூட்டைகள் வழங்கப்படுவதாக தெரிய வந்தது.
கிராம அதிகாரி கொடுத்த புகாரின்பேரில் அங்கு வந்த போலீசார் ஒரு லோடு ஆட்டோவில் அரிசி மூட்டைகளுடன் நின்று கொண்டிருந்த ராஜேந்திரன் (வயது 27), மாசிலாமணி (37) ஆகிய 2 பேரை கைது செய்தனர். அரிசி மூட்டைகளுடன் ஆட்டோவும் பறிமுதல் செய்யப்பட்டது.
நன்றி ; நக்கீரன்
கருத்துகள்