கிரண் பேடி அவர்கலே .........அடுத்தவரை குறை சொல்வதில் உள்ள சிக்கல் என்ன தெரியுமா ? ? ?


அன்னா ஹசாரே போராட்டம் நடந்து கொண்டிருந்த போது கிரண் பேடி பேசிய பேச்சுக்கள் கொஞ்ச நஞ்சம் அல்ல. அரசியல்வாதிகள் ஊழல் பேர்விழிகள் என்றும், அன்னா ஹசாரேதான் இந்தியாவின் விடிவெள்ளி என்றும் ஏகப்பட்ட பேச்சுக்கள் பேசினார்.

அடுத்தவரை குறை சொல்வதில் உள்ள சிக்கல் என்ன தெரியுமா ? உங்களின் கடந்த கால தவறுகள் எப்படி இருந்தாலும், தோண்டி எடுத்து கண்டு பிடிக்கப் பட்டு விடும். மிக மிக கவனமாக, அது வெளியில் தெரியாது என்று நீங்கள் நினைத்துக் கொண்டிருந்தாலும், நிச்சயமாக அது கண்டுபிடிக்கப் படும். அப்போது, நீங்கள் பேசிய பேச்சுக்களும், எடுத்த நிலைபாடுகளும் உங்கள் முகத்தில் அறையும். இத்தனை நாட்களாக நீங்கள் கவனமாக கட்டிக் காத்து வந்த உங்களின் இமேஜ் சரி செய்ய முடியாத அளவுக்கு அதள பாதாளத்தில் வீழ்ந்து போகும். அதற்குப் பிறகு நீங்கள் எவ்வளவு கூப்பாடு போட்டாலும், உங்கள் வார்த்தைகளுக்கு மதிப்பு இருக்காது.

1979ம் ஆண்டில் கிரண் பேடிக்கு வீரதீரச் செயல் புரிந்ததற்கான விருது வழங்கப் பட்டுள்ளது. பிப்ரவரி 2001ல் வெளியான சுற்றறிக்கையின் படி, வீர தீர விருது பெற்றவர்களுக்கும், அவரோடு பயணம் செய்யும் ஒருவருக்கும், ஏர் இந்தியா விமானத்தில் இரண்டாம் வகுப்பிலும், ரயிலில் ஏசி வகுப்பிலும் 75 சதவிகித கட்டணச் சலுகை உண்டு.29 செப்டம்பர் 2011ல் கிரண் பேடி டெல்லியிலிருந்து ஐதராபாத்துக்கும், ஐதராபாத்திலிருந்து சென்னைக்கும் பிறகு டெல்லிக்கும் ஏர் இந்தியா விமானத்தில் பயணம் செய்துள்ளார். இந்த பயணத்துக்காக கிரண் பேடி செலுத்திய சலுகை கட்டணம் 17,134/-. ஆனால் கிரண் பேடி 73,117 ரூபாய் செலவாகியுள்ளதாக க்ளெய்ம் செய்துள்ளார்.

இப்படி ஒரு சிக்கலில்தான் கிரண் பேடியும் சிக்கியுள்ளார். கூட்டங்களில் பேசுவதற்காக அவரை அழைக்கும் அமைப்புகளிடமிருந்து விமான டிக்கட்டுகள் வாங்கியதில் முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளார் என்பது ஆதாரத்தோடு அம்பலமாகியுள்ளது. அதாவது விமானத்தில் இரண்டாம் வகுப்பில் பிரயாணம் செய்து விட்டு முதல் வகுப்புக்கான டிக்கட்டுகளின் விலையை க்ளெய்ம் செய்துள்ளார். மேலும், வீர தீரச் செயலுக்கான விருது பெற்றவர் என்ற வகையில், அவருக்கு ஏர் இந்தியா விமான கட்டணத்தில் 75 சதவிகிதம் சலுகை இருந்தும், முதல் வகுப்பில் பிரயாணம் செய்தது போல போலியாக பணம் பெற்றுள்ளார் என்பது அம்பலமாகியுள்ளது. இவ்வாறு இவர் கூடுதலாக பெற்ற பணத்தை தான் எடுத்துக் கொள்ளவில்லை மாறாக, அவரது என்ஜிஓ அமைப்பான இந்தியா விஷன் பவுன்டேஷன் என்கிற அமைப்பின் கணக்கில் வரவு வைத்துள்ளார் என்பதும் தெரிய வந்திருக்கிறது.

30 மே 2011 அன்று டெல்லியிலிருந்து பூனாவுக்கும், மும்பையிலிருந்து சென்னைக்கும் தனியார் விமானத்தில் பயணம் செய்துள்ளார். இதற்கு ஆன செலவு 12,458/-. கிரண் பேடியை அழைத்த சேரிட்டீஸ் எய்ட் பவுன்டேஷன் என்ற அமைப்பிடம் கிரண் பேடி க்ளெய்ம் செய்த தொகை 26,386/-.

25 நவம்பர் 2010ல் டெல்லியிலிருந்து மும்பைக்கு தனியார் விமானத்திலும், மும்பையிலிருந்து டெல்லிக்கு ஏர் இந்தியா விமானத்திலும் பயணம் செய்கிறார் கிரண் பேடி. இதற்கு ஆன செலவு 14,097. கிரண் பேடி பர்ஸ்ட் மான்டிசோரி கான்பெரன்ஸ் என்ற அமைப்பிடமிருந்து க்ளெய்ம் செய்த தொகை 42,109/-.

2009 மார்ச் 6 அன்று டெல்லியிலிருந்து மும்பைக்கு சென்று பிறகு திரும்பி ஏர் இந்தியா விமானத்தில் வந்துள்ளார் கிரண் பேடி. இதற்கு ஆன செலவு 12,483. நோவார்டிஸ் என்ற தனியார் நிறுவத்திடமிருந்து கிரண் பேடி பெற்ற தொகை 32,495.

2008 டிசம்பர் 5 அன்று டெல்லியிலிருந்து மும்பைக்கு சென்று பிறகு திரும்பி ஏர் இந்தியா விமானத்தில் வந்துள்ளார் கிரண் பேடி. இதற்கு ஆன செலவு 12,614. கிரண் பேடி பெற்ற தொகை 31,387.

2007 மார்ச் 24 அன்று டெல்லியிலிருந்து பெங்களுர் சென்று பிறகு டெல்லிக்கு ஏர் இந்தியா விமானத்தில் திரும்பியுள்ளார் கிரண் பேடி. இதற்கு ஆன செலவு 9,625. இன்டஸ் ட்ரஸ்ட் இன்டர்நேஷனல் ஸ்கூல் என்ற அமைபிடமிருந்து கிரண் பேடி பெற்ற தொகை 29,872.

2007 மார்ச் 8 அன்று டெல்லியிலிருந்து ஐதராபாத் சென்று ஏர் இந்தியா விமானத்தில் திரும்பியுள்ளார் கிரண் பேடி. இதற்கு ஆன செலவு 8,331. ஆந்திரா தலைமைச் செயலக ஊழியர் நலச் சங்கத்திலிருந்து கிரண் பேடி பெற்ற தொகை 25,163

2006 நவம்பர் 21 அன்று டெல்லியிலிருந்து மும்பை சென்று ஏர் இந்தியா விமானத்தில் திரும்பியுள்ளார் கிரண் பேடி. இதற்கு ஆன செலவு 6,689. லீமேன் பிரதர்ஸ் நிறுவனத்திடமிருந்து கிரண் பேடி பெற்ற தொகை 30,084

2006 அப்டோபர் 14 அன்று டெல்லியிலிருந்து மும்பை சென்று ஏர் இந்தியா விமானத்தில் திரும்பியுள்ளார் கிரண் பேடி. இதற்கு ஆன செலவு 6,691. சஹாரா இந்தியா நிறுவனத்திடமிருந்து கிரண் பேடி பெற்ற தொகை 30,085

2006 அக்டோபர் 10 அன்று டெல்லியிலிருந்து மும்பை சென்று ஏர் இந்தியா விமானத்தில் திரும்பியுள்ளார் கிரண் பேடி. இதற்கு ஆன செலவு 6,689. மிடிடெக் நிறுவனத்திடமிருந்து கிரண் பேடி பெற்ற தொகை 21,098

2006 மே 21 அன்று டெல்லியிலிருந்து மும்பை சென்று ஏர் இந்தியா விமானத்தில் திரும்பியுள்ளார் கிரண் பேடி. இதற்கு ஆன செலவு 5,733. திருபாய் அம்பானி பள்ளியிடமிருந்து கிரண் பேடி பெற்ற தொகை 29,181

2006 மே 12 அன்று டெல்லியிலிருந்து மும்பை சென்று ஏர் இந்தியா விமானத்தில் திரும்பியுள்ளார் கிரண் பேடி. இதற்கு ஆன செலவு 5,733. திருபாய் அம்பானி பள்ளியிடமிருந்து கிரண் பேடி பெற்ற தொகை 18,085

இந்தச் செய்தி நேற்றைய இந்தியன் எக்ஸ்பிரஸ் டெல்லி பதிப்பில் வெளியானது. இந்தச் செய்தி வெளியானதும் பத்திரிக்கையாளர்களைச் சந்தித்த கிரண் பேடி, இந்தத் தொகைகள் அனைத்தும், என்ஜிஓ அமைப்புக்கு சேமிப்பாக சேர்க்கப் பட்டது என்றார். அந்த அமைப்பின் பொருளாளரும் இதே கருத்தை வழிமொழிந்தார்.





டிசம்பர் 2007ல் கிரண் பேடி ஐபிஎஸ் அதிகாரியாக இருந்து ஓய்வு பெறுகிறார். டிசம்பர் 2007க்கு முன், அவர் பயணம் செய்து, தவறாக பெற்ற தொகைகள் அனைத்தும், அது அவருக்காக இருந்தாலும், வேறு ஒருவருக்காக இருந்தாலும், லஞ்ச ஒழிப்புச் சட்டப் படி தண்டனைக்குரிய குற்றம்.லஞ்ச ஒழிப்புச் சட்டப் பிரிவு 13 (1) (d) (i), (ii) மற்றும் (iii) என்ன சொல்லுகிறது தெரியுமா ?

13. Criminal misconduct by a public servant

(1) A public servant is said to commit the offence of criminal misconduct,-

(i) by corrupt or illegal means, obtains for himself or for any other person any valuable thing or pecuniary advantage; or

(ii) by abusing his position as a public servant, obtains for himself or for any other person any valuable thing or pecuniary advantage; or

(iii) while holding office as a public servant, obtains for any person any valuable thing or pecuniary advantage without any public interest; or

ஒரு பொது ஊழியர், தனக்காகவோ, அல்லது வேறு ஒருவருக்காகவோ விலை மதிப்புள்ள ஒரு பொருளையோ, ஆதாயத்தையோ அடைந்தாலோ, தன்னுடைய அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து விலை மதிப்புள்ள ஒரு பொருளையோ, ஆதாயத்தையோ அடைந்தாலோ அல்லது, பொது ஊழியராக இருக்கும் போது, வேறு யாரோ ஒருவருக்காக விலை மதிப்புள்ள ஒரு பொருளையோ, ஆதாயத்தையோ அடைந்தாலோ அவர் கிரிமினல் மோசடி தவறை செய்தவர் ஆகிறார் என்றுதான் சட்டம் சொல்கிறது.

சட்டம் தெளிவாக, “தனக்கோ அல்லது வேறு ஒருவருக்காகவோ” என்று சொல்கிறது. அந்த வேறு ஒருவர், கிரண் பேடி தலைமையேற்று நடத்தி வரும் ட்ரஸ்டாகவும் இருக்கலாம். இப்படிப்பட்ட ஒரு குற்றத்தை ஒருவர் செய்து விட்டு, ஊழலைப் பற்றிப் பேசலாமா ?

காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் அபிஷேக் சிங்வி மிகச் சரியாக, கண்ணாடி வீட்டில் இருந்து கொண்டு கல்லெறியக் கூடாது என்று சொல்லியுள்ளார். ஒரு ட்ரஸ்டுக்கு தலைமை நிர்வாகியாக (Chairperson) இருந்து கொண்டு, அந்த ட்ரஸ்டுக்கு, போலியான பயணப் பட்டியல்களைக் கொடுத்து அதில் வரும் பணத்தை செலவிட்டேன் என்று சொல்லுவது எந்த விதத்தில் நியாயம் ?

இவரைப் போன்ற நபர்கள் ஊழலுக்கெதிரான போராட்டங்களை முன்னெடுப்பதால் தான் இந்தப் போராட்டம் முனை மழுங்கடிக்கப் படுகிறது.

1994ம் ஆண்டு என்று ஞாபகம். லஞ்ச ஒழிப்புத் துறையில் பணியாற்றிக் கொண்டிருந்த காலத்தில், வருடா வருடம் நடக்கும் ஆயுத பூஜை கொண்டாட்டத்திற்கு பணம் கொடுக்க முடியாது என்று தகராறு செய்வது வழக்கம். இதை கேள்விப் பட்ட அந்தத் துறையின் சட்ட ஆலோசகர், நேரில் அழைத்து, “ஏம்ப்பா தம்பி. சாமி இல்லைன்னு சொல்றியாமே !!!” என்றார். ஆம் என்று பதிலளித்ததும், “எப்படிச் சொல்ற” என்று பதில் கேள்வி கேட்டார். “இல்லை என்று நன்றாகத் தெரியும்” என்று பதில் சொன்னதும், அவர் கோபப்படாமல், அமர வைத்து, “இந்த அறையிலிருந்து ஒரு பேனாவை நீ திருடி விட்டாய் என்று வைத்துக் கொள்வோம். அது யாருக்கும் தெரியாது. எனக்கும் தெரியாது. ஆனால், அது உனக்குத் தெரியும் அல்லவா ? உன் மனது உன்னைக் கேள்வி கேட்கும் அல்லவா ? அதுதான் கடவுள்” என்று சொன்னார். நான் மனது கேட்கும் கேள்விக்கு பயப்படுவேன் சார் என்று சொன்னதும், அதுதான் கடவுள். நீ அதை நம்பினால் போதும் என்று சொல்லி அனுப்பி வைத்தார். இதைத்தானே வள்ளுவர் தன்னெஞ்சறிவது பொய்யற்க, பொய்த்தபின் தன்னெஞ்சே தன்னைச் சுடும் என்று சொன்னார் ?

இன்று எது நேர்மை என்பதற்கான அளவீடுகள் கடுமையாக மாறி உள்ளன. 1991 முதல் 1997 வரை லஞ்ச ஒழிப்புத் துறையின் இயக்குனராக இருந்தவர்கள், தங்களைச் சந்திக்க வரும் விருந்தினர்களுக்கு வாங்கிக் கொடுக்கும் காபிக்கு கூட சொந்தப் பணத்தை செலவு செய்வார்கள். கணக்கு காட்ட வேண்டிய அவசியம் இல்லாத ரகசிய நிதியை கணக்கு காட்ட வேண்டிய அவசியம் இல்லாத ரகசிய நிதியை தமிழகத்தில் வாங்காத அதிகாரிகள் 10க்கும் குறைவு என்றால் ஆச்சர்யமாக இருக்கிறதா ? இது முற்றிலும் உண்மை.

இன்று எந்த நிலைமை இருக்கிறது என்றால், ரகசிய நிதியை வாங்காத அதிகாரிகள் நமக்கு ஆபத்து என்று, அவர்களை வாங்க வேண்டி உயர் அதிகாரிகள் கட்டாயப் படுத்தும் அவலமும் நடந்து கொண்டிருக்கிறது. ஏனென்றால், இவன் வாங்கவில்லையென்றால், நம்பளையும் போட்டுக் கொடுத்து விடுவானோ, பேசாமல் அவனையும், நமது கொள்ளையில் பங்குதாரராக ஆக்கி விட்டால் என்ற எண்ணத்தின் வெளிப்பாடே இந்த மிரட்டல்.

ஒரு ஐபிஎஸ் அதிகாரி சொன்ன கதை இது. அவர் இளம் எஸ்.பியாக இருந்த போது, சேலம் மாவட்டத்தில் ஒரு காவல் நிலையத்துக்கு டிஐஜியோடு இன்ஸ்பெக்ஷனுக்காக சென்றிருக்கின்றனர். அந்த காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்ஷனில் ஈடுபட்டிருந்த டிஐஜிக்கு சாப்பிடுவதற்காக மாம்பழம் வைத்திருக்கின்றனர். அந்த மாம்பழத்தை எடுத்து, தலைக்கு மேல் உயர்த்தி, “இது என்ன வெரைட்டி ?” என்று அந்த டிஐஜி கேட்டிருக்கிறார். அவர்கள் அந்த மாம்பழத்தின் வெரைட்டியை சொல்லியிருக்கிறார்கள். அதோடு அந்த உரையாடல் முடிந்து விட்டது. இன்ஸ்பெக்ஷன் முடிந்து, எஸ்பியும், டிஐஜியும், ஒரே காரில் திரும்பியிருக்கின்றனர். வண்டி நின்றதும், டிஐஜி, வண்டியின் ட்ரைவரைப் பார்த்து, கார் டிக்கியில் மாம்பழக் கூடை இருக்கும், எடுத்து வீட்டில் வையப்பா என்றிருக்கிறார். ட்ரைவரும், மாம்பழக் கூடையை எடுத்து டிஐஜி வீட்டுக்குள் சென்றிருக்கிறார். இதைக் கேட்ட எஸ்.பி. ஆச்சர்யப்பட்டு போய், சார் நீங்கள் யாரிடமுமே மாம்பழம் வேண்டும் என்று கேட்கவில்லை. எப்படி சார் கார் டிக்கியில் மாம்பழம் இருக்கிறது என்று சரியாக கணித்தீர்கள் என்று கேட்டதற்கு, நீ இப்போதுதானே தமிழ்நாடு போலீசில் சேர்ந்திருக்கிறாய்… போகப் போக புரிந்து கொள்வாய். அதிகாரியின் கண் பார்வையை பார்த்து நடந்து கொள்பவன் வாழ்க்கை போலீஸில் செழிப்பாக இருக்கும் என்று சொல்லியிருக்கிறார்.

இது கதை அல்ல. உண்மையில் நடந்த சம்பவம். காவல்துறையில் ஒரு நபரை மடக்குவதற்கு என்ன வழிமுறைகளை வேண்டுமானாலும் கடைபிடிப்பார்கள். ஒரு சில அதிகாரிகள் இந்த வழிமுறைகளை கடைபிடித்து, பத்திரிக்கையாளர்களை மடக்கும் பாணியே அலாதி. பத்திரிக்கையாளர் வீட்டு விசேஷங்களுக்கு உயர் அதிகாரிக்கு பத்திரிக்கை வைத்தால் உடனே, சம்பந்தப் பட்ட லோக்கல் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டரிடம் சொல்லி வேலைக்கு ஒரு கான்ஸ்டபிளை அனுப்புவதில் தொடங்கி, நிகழ்ச்சி அன்று எதிர்ப்பார்க்காத ஒரு பெரிய தொகையை மொய்யாக அனுப்புவார்கள். பெரிய தொகையை மொய்யாக வாங்கி விட்டு, அந்த அதிகாரிக்கு எதிராக செய்தி போடுவீர்களா ?

அடுத்த படியாக உங்கள் வீட்டு குழந்தைகளின் பள்ளி அட்மிஷனில் தொடங்கி கல்லூரி படிப்பை முடித்து வேலைக்கு போவது வரை, உயர் அதிகாரிகளின் உதவி தொடரும், நீங்கள் பத்திரிக்கையாளராக தொடர்ந்து இருந்தால்.

காவல்துறை அதிகாரிகளைப் பற்றி ஊழல் செய்திகள் பெரும்பாலும் வெளி வராமல் இருப்பதற்கு காரணமே இது போன்ற ஊழல்கள் தான். அதையும் மீறி அதிகாரிகளைப் பற்றி செய்தி சில ஊடகங்களில் வருகிறதென்றால், அது செய்தியில் அடிபடும் அதிகாரியைப் பிடிக்காத அதிகாரி, அந்த செய்தி வருவதற்காக மெனக்கிடுகிறார் என்று அர்த்தம்.

அரசின் ரகசிய நிதியை கையாடல் செய்வது என்பது ஒரு தவறே இல்லை என்ற அளவுக்கு ஆகியிருக்கிறது. அரசின் ரகசிய நிதியை கையாடல் செய்து பாக்கெட்டில் போட்டுக் கொள்வதற்கும், 2001 விலையில் 2008ல் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கி, அதற்கு பதிலாக லஞ்சம் வாங்குவதற்கும் இடையே உள்ள வித்தியாசம் அளவு மட்டுமே. இரண்டுமே மக்களுக்கு எதிராக மக்கள் வரிப்பணத்தில் அடிக்கும் கொள்ளைகள் மட்டுமே. வேண்டுமானால் நமக்கு நாமே சே.சே… இது ஒன்னும் தப்பில்ல… நாட்டுல எவன் வாங்காம இருக்கான்.. என்று சமாதானம் சொல்லிக் கொள்ளலாம்.

சுத்தமாக நம்பிக்கை இழந்து விட்ட நிலையில், ஊழலுக்கு எதிராக, குறைந்தபட்சம் காங்கிரஸ் கட்சியை ஓட ஓட விரட்டிய ஒரு போராட்டம் நடக்கிறது, அதற்கெதிராக ஒரு சக்தி கிளம்பியிருக்கிறது என்று நினைத்தால், அதுவும் இப்படி ஊழல் புகாரில் சிக்கியிருப்பது மிகுந்த வேதனையை ஏற்படுத்துகிறது.

நேர்மையாக இருப்பவர்கள் இச்சமூகத்தில் சந்திக்கும் பிரச்சினைகளும் எதிர்ப்புகளும், நேர்மையாக இருப்பது தவறோ என்ற அச்சத்தை ஏற்படுத்துகிறது. இத்தனை ஊழல் பேர்விழிகளும், சமரசவாதிகளும் இருக்கும் இந்த உலகத்தில் எப்படி வாழ்வது என்று மலைப்பாக இருக்கிறது.

THANKS : SAVUKKU


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இதுதான் ஊடகம் நடந்து கொள்ளும் முறையா ? பத்திரிக்கையாளர்கள் கவனத்திற்கு ! ! !

ஹாதியா வழக்கில் வெளுக்கிறது நீதிமன்றங்களின் சாயம் !

நீச்சலுடையை எறிந்து விட்டு நிகாபுக்கு ஏன் மாறினேன் ?